மாடியிலொரு நந்தவனம் – 1

“என்னது தென்னை மரம் வேறு, இளநீர் மரம் வேறா…? சரி அதில் ஒன்னு இதில் ஒன்னு கொடுங்க…”

என்று மஜ்னு (என்னவர்) வாங்கிக் கொண்டார்…

“வீடு அஸ்திவாரம் போடும் போதே மரம் வைத்தால் தான் நமக்கு சீக்கிரமா பலன் தரும். ரெண்டு தென்னை இருந்தா போதும் வீட்டுத் தேவைக்கு…” என்றார் என்னிடம்…

நான் அசுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்… ஏனென்றால் எனக்கு செடி, மரங்களில் அத்தனை ஆர்வம் இல்லை அப்போது… இப்படி 2007ம் வருடம் முதன்முதலாகத் தென்னையில் துவங்கியது எங்கள் தோட்டப் பயணம்…

“தேனாட்டம் இருக்கும் இந்த மரத்துக் காய்… ஒரு வாது உடைச்சி வைக்கிறேன்மா…”

என்று என் மாமனார் அவருடைய பில்டிங் பின்புறம் குடியிருந்த ஒருவர் வைத்த முருங்கை மரத்தின் கிளையை ஒடித்து வந்து வைத்தார்…

மளமளவென வீட்டு வேலைகள் முடிந்து 14 ஆண்டு வாடகை வீட்டு வாசத்துக்குப் பின் சொந்த வீட்டில் குடியேறினோம்… அப்ப காம்பவுண்ட் சுவர் மற்றும் மாடி சுவரின் முன்புறம் நான் செடி குந்தாணி வைத்துப் பதிக்க சொன்னேன்… வீட்டு முன்புறம் வாசல்படி ஓரமா தொட்டி போல கட்டி விட சொன்னேன்…

அதில் பெரிதாய் எதுவும் வளர்க்கவில்லை. சோற்றுக்கற்றாழை, திருநீற்றுப் பச்சிலை மாதிரி பராமரிப்பு தேவையற்ற செடிகள் காடு போல மண்டிக் கிடக்கும்…

முன்புற போர்ட்டிகோ தவிர்த்து வீட்டைச் சுற்றி மண் வாசல்… ஒன்பது செண்ட் இடத்துல மூன்று செண்ட்ல வீடு போக மீதி காலி இடம் தான்… வீடு கட்டி முடிக்கும் தருவாயில்…

“நாம மாலை நேரங்களில் மரத்தடியில் இளைப்பாற இங்க கண்டிப்பா நான் வரைஞ்சு காட்டற மாதிரி கடப்பை திட்டு வேண்டும்…”

என்று இவரிடம் கெஞ்சி… அதற்கு பதிக்கத் தேவையான கடப்பைக் கற்களை என் ஸ்கூட்டியிலேயே வைத்து எடுத்து வந்து தந்தேன்… அப்ப கார் இல்லை… வீடு கட்டி முடிக்கும் தருவாயில் இப்படி ஆளுக்கொரு டூவீலரை எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு வேலையாக அலைந்து கொண்டிருப்போம்…

“செம்மண் இருந்தா தான் செடி வளரும்…”னு சொல்லி இவர் ஒரு லோடு செம்மண் (அப்பவே விலை 5000+) வாங்கி சுற்றிலும் இருந்த மண் வாசலில் கொட்டினார்… போர்டிகோவின் கோடியில் இவர் ஒரு சாதிமல்லி செடி நட்டார்… ஒரே வருடத்தில் அது பூத்துக் குலுங்கியது…

தினமும் இவர் தான் பறித்துத் தருவார்… பறித்துத் தருவதோடு அவருக்கு வேலை குறைவாக இருக்கும் நாட்களில் தொடுக்க வசதியாக இரண்டிரண்டாக எடுத்து வைப்பார்… மகள் அல்லது நான் தொடுத்து இருவரும் சூடிக் கொள்வோம்…

பின் வாசலில் மாதுளை, சீத்தா, கொய்யா, கருவேப்பிலை, குத்துமல்லிச்செடி என ரகத்துக்கொன்றாய் நட்டார்… அப்ப எங்களுக்கு தண்ணீர் கஷ்டம் அதிகம். போர்வெல் கடும் உப்பு என்பதால் அதை அதிகமாகப் புழங்க மாட்டோம்… நல்ல தண்ணீர் மட்டும் போதாது என்பதால் அவ்வப்போது லாரித்தண்ணியும் வாங்குவோம்…

பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் போது செடிகளுக்கு லாரித்தண்ணீர் வாங்கி ஊற்ற முடியுமா… அதனாலேயே காய்கறிகள் எதுவும் வளர்க்கவில்லை… இந்த மரங்களுக்கு வாரம் ஓரிரு முறை போர் வாட்டர் தான்…

வீடு கட்டிய கையோடு ஹஜ் பயணம்… அது முடிந்த உடனே நான் மேற்படிப்பு படிக்கப் போய்ட்டேன்… அதனால் தானோ என்னவோ அப்ப எனக்கும் தோட்டத்துக்கும் வெகு தூரம்.

இயற்கையை ரசிக்க மட்டும் பின்வாசலுக்குப் போவேன். மற்றபடி ஒரு மண்துகள் கூட அப்ப என் விரலில் படாது. எல்லாமே மஜ்னு தான்… வளர்த்து, அறுவடை செய்து, அந்த மாதுளையை உதிர்த்து என் கைகளில் தந்தால் தான் நான் சாப்பிடுவேன்…

மாமனார் வைத்த முருங்கை மரம் வாது விழுந்த இடத்தில் எல்லாம் முளைத்து வந்து மூன்று மரங்களாக அதுவாகவே பெருகியது… காய்த்துக் கொட்ட ஆரம்பித்தது… அக்கம்பக்கம், உறவுகளுக்குக் கொடுத்தது போக எக்கச்சக்கமாக மிஞ்சிக் கிடக்கும்…

அப்போது சிறுவனாக இருந்த எங்கள் மகன் அருகில் இருக்கும் காய்கறிக் கடையில் கொடுத்து காசு வாங்கி தன் உண்டியலில் போட்டுக் கொள்வான்… சீசனுக்கு ஐநூறு ஆயிரம் காய்கள் வரை காய்க்கும்…

இப்போது மாடித் தோட்டத்தைப் பராமரிப்பதைப் போல அந்த தோட்டத்தை நான் ஒரு நாளும் பராமரித்ததே இல்லை. எப்போதும் குப்பை கூளமாக தான் கிடக்கும்… இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ஆள் வந்து சுத்தம் செய்து தந்து விட்டு பணம் வாங்கிச் செல்வார்…

எனக்கு தெரிந்து எந்த உரமும் வைத்ததில்லை. எந்த பூச்சியும் வந்ததில்லை. வெறும் தண்ணீர் மட்டும் தான். ஆனால் அதுவாகவே காய்த்துக் கொட்டும். கருவேப்பிலையில் மட்டும் வெள்ளை பொட்டுக்களாக ஏதோ நோயோ பூச்சியோ இருந்தது. ஆனாலும் அது மரம் போல வளர்ந்து கீழே எக்கச்சக்க கன்றுகள் வைத்தது…

அன்றைய எங்கள் தோட்டம் என் கவிதைகளின் களம்… பல நூறு கவிதைகள் பிறந்த தளம் அது… அதில் ஒன்று தான் கீழே… 👇

என் வீட்டு தோட்டத்தில் நான் பார்த்து பார்த்து கட்டிய இந்த கடப்பைத் திட்டு…

பொழுது விடியும் பொழுதில் சூழலை ரசித்தபடி கருப்புச் சூரியன் இங்கே அமரவும்…

அந்தி சாயும் பொழுதில் அழகாய் சாய்ந்து மகிழ்ச்சி ததும்ப மனம் விட்டு கதை பேசவும்…

வண்ண நிலவை வான் முகில் மறைக்கும் போது அவனில் அவள் மறையவும்…

இப்புறம் தென்னை அப்புறம் முருங்கை
நடுவில் ஒடிசலாய் பப்பாளி…
வலப்புறம் மந்தகாச நறுமணத்துடன் வெள்ளிமலராய் ஜாதிமல்லி…
இடப்புறம் புதரென வளர்ந்து புன்னகை பூக்கும் அடுக்குமல்லி…

மாதுளை, சீத்தா, கொய்யா என
பின்னே பசிக்கும் போது பறித்துண்ண பலப்பல கனிகள்…
இத்துணை இருந்தும் உண்பதற்கு எதுவும் வேண்டாம் நீ மட்டும் போதுமென்றாய்…
என் வெட்கச் சிரிப்பை ரசித்தபடி…

இத்தனை சந்தோஷங்களுக்கும் ஒரு நாள் ஆப்பு வருமென்று அப்போது எனக்குத் தெரியாது…

தொடரும்…

#aj_terrace_garden