மாடியிலொரு நந்தவனம் – 2

“என்ன சொல்றீங்க… எப்படியாவது இந்த சாதிமல்லிச் செடியை எடுக்காம இடிந்த காம்பவுண்டு கட்ட முடியாதா…?!” என்றேன் அதிர்ச்சியாய்…

பற்றாக்குறை பட்ஜெட்டில் வீடு கட்டியது ஒரு புறம் என்றால் நான்கு பக்கமும் காம்பவுண்டு எழுப்ப வேண்டிய கட்டாயம் இன்னொரு புறம்…. அதனால் ஹாலோப்ளாக் கல்லுல கட்டி பூசாமல் விட்டு விட்டோம்.

அது எட்டு வருஷம் தாங்கியது. ஒரு நாள் மழைல இடிந்து விழுந்து விட்டது. உடனடியா சுவர் எழுப்பி ஆக வேண்டிய கட்டாயம். ரெடிமேட் காம்பவுண்ட் சுவர் போடுபவரை அழைத்துக் காட்டிய போது சுவர் ஓரமாக வளர்ந்து ஆலமரமென தலை விரித்துப் படர்ந்திருந்த சாதிமல்லிச் செடியை எடுத்தால் தான் கட்ட முடியும்னு சொல்லிட்டாங்க.

மனசைக் கல்லாக்கிக் கொண்டு எடுத்தாச்சு…

வேப்பங்காற்று உடம்புக்கு நல்லதுன்னு வீட்டுக்கு வெளியே மஜ்னு(என்னவர்) ஒரு வேப்பமரம் வைக்க… அதுவும் பெரிய மரமாக வளர்ந்திருந்த நிலையில் சாக்கடை கட்டுவதற்காக கார்ப்பரேசன்காரங்க அதையும் வெட்டிட்டாங்க…

எங்க வீடு சுமார் 4000 சதுரடி… கார்னர் சைட். அதில் வீடு மட்டும் சுமார் 1400 சதுரடி. முன்புறம் பெரிதாய் போர்ட்டிகோ. வீட்டுக்கு அடுத்ததாக ஷட்டர் போட்டு எங்கள் கெமிக்கல் கம்பெனி.

கிழக்குப்புறம் போர்ட்டிகோ, வடக்கே ரெண்டு முருங்கை மரம், ஒரு தென்னை மரம், அமர்ந்து இளைப்பாற ப வடிவிலான திட்டுக்கள்… வடமேற்கு புறம் கொய்யா, மாதுளை, சப்போட்டா, சீத்தா, இன்னொரு சிறிய தென்னை குத்துமல்லிச் செடி ஆகியவை இருந்தன… எல்லாமே வீடு கட்டிய புதிதில் 2008-09 வாக்கில் வைத்தவை.

அவை யாவும் மிக மிக சுவையான பழங்களைத் தந்து கொண்டிருந்த நிலையில் 2018ம் வருடம் எங்கள் கெமிக்கல் கம்பெனி விரிவாக்கத்துக்காக வடக்கே இருந்த ஒரு தென்னை மற்றும் ஒரு முருங்கை தவிர்த்து மற்றதை வெட்டி ஷெட் போட்டு விட்டோம்… அந்த தென்னைக்கும் முருங்கைக்கும் கூட வட்டமாக கல் கட்டி விட்டுட்டு மீதி இருந்த மண்வாசல் முழுக்க சிமெண்ட் காரை போட்டு விட்டோம்…

எல்லாம் இருந்த வரைக்கும் பெரிதாய் அதில் என் கவனம் செல்லவில்லை. ஆனால் இழக்கும் போது அந்த வலி மிகவும் பெரிதாக இருந்தது… அவற்றை இழந்த அன்று நான் எழுதிய கவிதை இது… 👇

ஆயிரம் கதைகள் சொன்ன
கட்டுக்கொய்யா எங்கே…
ஆளுக்கொரு கைபிடித்து உலுக்கிய
குண்டு சீத்தா எங்கே…
சட்டியில் எண்ணெய் ஊற்றி வைத்த பின்
ஓடிப் போய் பறித்தெடுக்கும்
கருவேப்பிலை எங்கே…

இரவின் மடியில் கீழமர்ந்து காதல் பேசிய
தென்னம்பிள்ளை எங்கே…
ஊராரெல்லாம் நெத்தமாட்டம் செவக்குதுனு
பறித்துப் போன மருதாணி எங்கே…

பூமலரும் போதெல்லாம் புன்னகை மலர வைக்கும்
சாதிமல்லிப் பந்தலெங்கே…
அர்த்தசாமங்களில் என்னவன் அருகிலமர்ந்து
மாதுளமறிந்து உதிர்த்துத் தரும் மாதுளையெங்கே…

அதிகாலையிலென் குக்கர் விசிலோடு
போட்டி போட்டுக் கூவும் குயில்
நாளை வந்து ஏமாறுமோ…
சின்னச் சிறகடிக்கும் வண்ணப்பறவை
கொத்த கொய்யா இல்லாமல்
குமுறியழுமோ…

இன்னமுதப் பறவைக் கூச்சலோடு கழித்த
பொன்மாலைப் பொழுதுகள்
இனி வாராவா…
என் கண்ணிமையை மூட வைக்கும் தென்னங்காற்றும்
இனி வீசாவா…

என்னைக் கவிஞியாக்கிய தோட்டத்தில்
அந்தோ வெற்றிடமும் வெய்யிலும்…

கீற்றில் ஒளிந்து மறையும் வானிலவுக்கு
இனி திரையுமில்லை தடையுமில்லை…
அந்த பாலொளிக்காகக் காத்திருந்தென்
மனம் தேற்றிக் கொள்கிறேன்,
இது தான் வாழ்க்கையென்றே…

👇

வெட்டியபின் மரமில்லாப் பெருவெளியின் படங்கள் கீழே கொடுத்திருக்கிறேன்…

2018 ஜூன் மாதம் அத்தனையும் போய்டுச்சு… அதன் பின் இரு வருடங்கள் தொழில், ஒரு யூட்யூபராக என் பணிகள் அடுத்ததா மகளின் திருமணம், அவளுடைய பிள்ளைப்பேறு என மூழ்கி விட்டேன்… மாடித் தோட்டம் பற்றி எந்த ஒரு அறிவும் இல்லை எனக்கு. அது மட்டுமல்லாமல் எந்த செடியைப் பற்றியும் எந்த விஷயமும் தெரியாது.

எது தக்காளி செடி எது கத்தரிச்செடி என்று கூட தெரியாது… ஆனால் இன்று மாடியிலும் கீழேயும் 650+ செடி தொட்டிகள்… சுமார் 200-300 வகை செடிகளை Identify பண்ண தெரியும்… சுமார் 100 வகைச் செடிகளின் வளர்ப்பு நுணுக்கங்கள் தெரியும்… இவையாவும் மிகவும் குறுகிய காலத்தில் கற்றுக் கொண்டவை தான்…

நாங்கள் மாடித் தோட்டம் தொடங்க ஆரம்பப்புள்ளி வைத்தது எதுன்னு கேட்டால் லாக்டவுனின் போது அவ்வப்போது ஊருக்குள் வந்து திகிலூட்டிய அந்த கார்ப்பரேசன் குப்பை வண்டி தான்… அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்…

தொடரும்…

#aj_terrace_garden